LATEST NEWS
“பணத்தை வீணாக்காதே..!” தந்தை கண்டித்ததால் அதிர்ச்சி முடிவு… பெங்களூரில் 13 வயது சிறுவன் மாயம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு உத்திரஹள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனுக்கு மீன்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அவன் வீட்டிற்கு மீன் வாங்கி வந்தபோது, அவனது தந்தை நாகேந்திரா தேவையில்லாமல் பணத்தை வீணாக்கக் கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பெற்றோர் அவனைத் தேடிக் கண்டுபிடித்து இனிமேல் இதுபோன்று செய்யக் கூடாது என்று அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஜூலை 27 அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அச்சிறுவன், மீண்டும் ஆசையாக மீன்களை வாங்கி வந்துள்ளான். இதைப் பார்த்த அவனது தந்தை மிகுந்த கோபமடைந்து, சிறுவனை கடுமையாகத் திட்டி அடித்துள்ளார். பின்னர் அவனை டியூஷனுக்குப் போகுமாறு கூறிவிட்டுத் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டார். தந்தையின் கோபத்தாலும் அடியினாலும் மனமுடைந்த சிறுவன், அன்று மாலை சுமார் 5 மணியளவில் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
இரவு 10 மணிக்கு மேலாகியும் சிறுவன் வீட்டிற்குத் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாய் லட்சுமி, சுப்ரமண்யபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பள்ளி என அனைத்து இடங்களிலும் தேடியும் சிறுவனைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், காணாமல் போன சிறுவனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
