LATEST NEWS
“ரயில் காலியா இருந்தா எங்க வேணா படுப்போம்” உங்களுக்கு என்ன..? ஒரு பைசா கூட தரமாட்டேன்.. பொதுப் பெட்டி டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் கோச்சில் சொகுசுப் பயணம்… தட்டிக்கேட்ட TTE-யிடம் பயணி செய்த அராஜகம்..!!
ரயிலில் முறையான முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டி டிக்கெட்டை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு நபர் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டியின் மேல் படுக்கையில் வசதியாகப் படுத்துக் கொண்டு பயணம் செய்துள்ளார். ரயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்ய வந்தபோது, அந்த நபர் முன்பதிவு பெட்டியில் படுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி கீழே இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால், அந்தப் பயணி கீழே இறங்க மறுத்ததோடு, டிக்கெட் பரிசோதகருடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதத்தின் போது அந்தப் பயணி, ரயில் காலியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் அல்லது படுக்கலாம் என்று தனக்கே உரித்தான ஒரு விசித்திரமான விதியைக் கூறி வாதாடியுள்ளார். ரயில்வே விதிகளின்படி அபராதம் விதிப்பதாக TTE எச்சரித்தபோது, “குவஹாத்தி வரைக்குமான சரியான கட்டணத்தை மட்டுமே தருவேன், அதற்கு மேல் ஒரு பைசா கூடத் தரமாட்டேன்” என்று கூச்சலிட்டுள்ளார். இதனால் பொறுமையிழந்த TTE, அவரை இருக்கையை விட்டு கீழே இழுக்க முயன்றதோடு, ரயில்வே பாதுகாப்புப் படையினரை அழைப்பதாக எச்சரிக்கும் போது அந்த வீடியோ முடிகிறது.
இந்திய ரயில்வே விதிகளின்படி, பொதுப் பெட்டி டிக்கெட் வைத்துள்ளவர்கள் முறையான முன்பதிவு அல்லது TTE அனுமதியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க சட்டப்படி அனுமதியில்லை. விதிகளை மீறி செயல்படும் பயணிகள் மீது அபராதம் விதிக்கவோ அல்லது RPF-இடம் ஒப்படைக்கவோ TTE-க்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கடமையைச் செய்த அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்ட அந்தப் பயணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
