LATEST NEWS
“போன்ல இருந்த ஆக்சிடென்ட் போட்டோவையெல்லாம் அழிச்சுட்டாங்க..” மைனர் சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி வியாபாரி பலி… மகனைக் காப்பாற்ற முஷ்டியை இறுக்கி மிரட்டிய நீதிபதி..!!
கேரளாவில் நீதிபதியின் மைனர் மகன் ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியதில் தெருவோர வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் கொச்சியில் நேற்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையோரத்தில் உணவுக் கடை நடத்தி வரும் ஜெயபாலகிருஷ்ணன் (54), தனது வேலையை முடித்துவிட்டு அதிகாலை 2:30 மணிக்கு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சூரை சேர்ந்த நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார், ஸ்கூட்டரின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டர் நசுங்கிய நிலையில், ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனை கைது செய்தனர். பெற்றோர்களுக்கு தெரியாமல் காரை எடுத்து வந்ததாகவும், கனமழையின் காரணமாக சாலையில் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரை தவிர்ப்பதற்காக ஸ்கூட்டர் ஓட்டுநர் திடீரென திருப்பியதால் தன்னால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவன் கூறியுள்ளான். சிறுவன் மது அருந்தவில்லை என்று தெரியவந்தாலும், மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், காவல்துறை அவனுக்கு காவல் நிலைய பிணை வழங்கி அனுப்பி வைத்தது.
எனினும், இறந்தவரின் குடும்பத்தினர், அவன் ஒரு நீதிபதியின் மகன் என்பதால் மட்டுமே காவல்துறை சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாக குற்றம் சாட்டினர். காவல் நிலையத்தில் நீதிபதி கோபமடைந்து மிரட்டியதாகவும், விபத்தில் சம்பந்தப்பட்ட காரின் புகைப்படங்களை தனது கைபேசியிலிருந்து காவல்துறை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டதாகவும் இறந்தவரின் சகோதரர் தெரிவித்தார். இதற்கிடையே, சிறுவனுக்கு தற்காலிக பிணையே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கைது செய்யப்பட்டு சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், சிறுவனுக்கு வாகனத்தை வழங்கியதற்காக, காரின் உரிமையாளரான நீதிபதி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக தெரிவித்தனர்.
