LATEST NEWS
இறுதி மூச்சிலும் 40 உயிர்களைக் காத்து மாவீரனாய் மறைந்த ஓட்டுநர்.. மாரடைப்பிலும் பேருந்தை நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது உயிரே பிரியும் நிலையிலும் சாதுர்யமாகச் செயல்பட்டு, பேருந்தில் இருந்த 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த (APSRTC) அந்தப் பேருந்து ஓட்டுநர், வழக்கம்போல பயணிகளைச் சுமந்துகொண்டு தனது வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தான் மயக்கமடையும் தறுவாயிலும், பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாகப் பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வீதியின் ஓரமாகப் பத்திரமாக நிறுத்தினார். பேருந்தை முழுமையாக நிறுத்திய அடுத்த சில வினாடிகளிலேயே அவர் ஓட்டுநர் இருக்கையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தனது இறுதி மூச்சு அடங்கும் நிலையிலும் சற்றும் பதற்றமடையாமல், பேரழிவைத் தடுத்து 40 பேரின் உயிரைக் காப்பாற்றிய அந்த ஓட்டுநரின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர்மல்கப் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி, பலரையும் சோகத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
