Uncategorized
“அய்யயோ.. சாலையில் பறந்த தீப்பொறி..” பைக்கை அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற கார்.. 73 வயது முதியவர் செய்த கொடூரம்.. நெஞ்சைப் பதறவைக்கும் 3 நிமிட வைரல் வீடியோ..!!
தெற்கு டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி, அதை சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற 73 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் பிகாஜி காமா பிளேஸிலிருந்து ஆர்.கே.புரம் மெட்ரோ நிலையம் நோக்கி நீல நிற ஹோண்டா அமேஸ் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. முனிர்கா கிராமத்தைச் சேர்ந்த தனிஷ் தோகாஸ் (21) என்ற இளைஞர் சாலையோரம் தனது பைக்கில் அமர்ந்திருந்தபோது, வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த வேணு கோபால் என்ற முதியவர் ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியுள்ளது. இதில் பைக் காரின் அடியில் சிக்கிக்கொள்ள, அந்த வாலிபர் நல்வாய்ப்பாக கீழே விழுந்து பலத்த காயங்களின்றி உயிர் தப்பினார்.
இருப்பினும், காரை நிறுத்தாமல் ஓட்டிய முதியவர், அந்த பைக்கை அப்படியே அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். இதனால் சாலையில் தீப்பொறி பறந்ததைக் கண்ட பொதுமக்கள், ஆப்பிரிக்கா அவென்யூ சாலை வழியாக அந்த காரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்த 3 நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பொதுமக்கள் காரைச் சூழ்ந்துகொண்டு முதியவரை வெளியே வருமாறு கேட்பதும், அவர் கைகூப்பி மன்னிப்பு கேட்பதும் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.புரம் போலீஸார் முதியவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் மது அருந்தவில்லை என்பது தெரியவந்தது. தற்போது அவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல், மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
