CRIME
“அய்யோ கொடுமையே.. தாய் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை..” கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய சோரகை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், செல்போன் பார்த்ததற்காகத் தாய் திட்டியதால் ஏற்பட்ட மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய சோரகை பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் – ராஜாத்தி தம்பதியரின் 19 வயது மகள் நதியா, நங்கவள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற நதியாவின் தாயார், வீட்டில் இருக்கும்போது செல்போன் பார்க்க வேண்டாம் என்று மகளுக்கு அறிவுரை கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும், மாலையில் தாய் வீடு திரும்பியபோதும் நதியா தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய், “ஆடு, மாடுகளுக்கெல்லாம் தீவனம் வைக்காமல் இப்படி செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்று நதியாவைக் கடுமையாகத் திட்டியுள்ளார். தாயின் இந்தத் திட்டுதலால் கடுமையான மனவேதனையடைந்த மாணவி, அன்றிரவு தனது அறைக்குச் சென்று வழக்கம் போலத் தூங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் நதியா அறையை விட்டு வெளியே வராததாலும், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும் சந்தேகமடைந்த தாய் ராஜாத்தி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது நதியா துப்பட்டாவால் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து நதியாவை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
