CRIME
“அடப்பாவி.. சம்பளம் தராத ஆத்திரம்..” முதலாளியை கதறவிட்டு தொழிலாளி செய்த பகீர் காரியம்.. 6 மாதங்களாக போலீசுக்கு அல்வா கொடுத்த 39 வயது நபர்.. பரபரப்பு பின்னணி..!!
நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சம்பளப் பாக்கி வழங்காத ஆத்திரத்தில் ஒப்பந்ததாரரின் காரைத் திருடிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை 6 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அந்த நிறுவனத்தில் ரூபிங் ஷீட் அமைக்கும் பணி நடந்தபோது, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் நந்து என்பவர் அதனை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வந்துள்ளார். அவரிடம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அனுப் (39) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஒப்பந்ததாரர் நந்து மூலம் அனுப்பிற்குச் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அனுப் வேலையைச் சரிவரச் செய்யவில்லை எனக் கூறி அவருக்கான சம்பளப் பணத்தில் ரூ.30 ஆயிரத்தை நந்து பாக்கி வைத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அனுப், சம்பவத்தன்று ஒப்பந்ததாரர் நந்துவின் காரைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தனது கார் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நந்து, உடனடியாக கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நந்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அனுப்பைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
கார் திருடப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கங்கைகொண்டான் போலீசார் நேற்று முன்தினம் குற்றவாளி அனுப்பை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து திருடப்பட்ட காரைப் பறிமுதல் செய்யும் பணிகளில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பளப் பாக்கி தராததற்காக முதலாளியின் காரையே தொழிலாளி திருடிச் சென்ற இந்த விசித்திரச் சம்பவம் நெல்லை மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
