CRIME
“ரூமுக்குள்ள கேஸ் இருக்கு, ஓடுங்க…” தொழிலாளர் குடியிருப்பில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. திக் திக் வீடியோ..!!
மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டாடா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தற்காலிகக் குடியிருப்பில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
அறைகளில் இருந்த சிலிண்டர்கள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்ற ஆபத்தான சூழல் நிலவியதால், அங்கிருந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு தங்கியிருந்த சுமார் 200 முதல் 300 தொழிலாளர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. அதிர்ஷ்டவசமாக, இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
