தீப ஒளி பரவிய வீட்டில் தீப்பிழம்பு…டீசல் கேன் சரிவால் தந்தை மகள் பலி… சென்னை மாதவரத்தில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீப ஒளி பரவிய வீட்டில் தீப்பிழம்பு…டீசல் கேன் சரிவால் தந்தை மகள் பலி… சென்னை மாதவரத்தில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்…!!

Published

on

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு கணபதி தோட்டம் பகுதியில் குறுகிய சந்தில் அமைந்துள்ள வீட்டில் லாரி ஓட்டுநரான அறிவழகன் (45) குடும்பத்துடன் வசித்து வந்தார். இரவு நேரத்தில் வீட்டு வாசலில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில், தனது லாரியில் ஊற்றுவதற்காக அறிவழகன் வீட்டில் கேனில் வாங்கி வைத்திருந்த டீசல் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தது. கேனில் இருந்து வெளியேறிய டீசல் வாசல் வழியாக வழிந்தோடி, அங்கு எரிந்து கொண்டிருந்த கார்த்திகை தீப விளக்கில் பட்டதால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ மளமளவெனப் பரவியது.

தீ வேகமாகப் பரவியதில் வீட்டுக்குள் இருந்த அறிவழகன், அவரது மனைவி அனுஷியா மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகிய மூவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் அனுஷியா மட்டும் அதிர்ஷ்டவசமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். ஆனால், வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட அறிவழகனும் அவரது 11/2 வயது மகள் தன்ஷிகாவும் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் கூச்சல் சத்தம் கேட்டு உதவ ஓடி வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

Advertisement

வீடு முழுவதும் தீ பற்றி எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில், உயிரிழந்த தந்தை-மகளின் உடல்களை மீட்ட மாதவரம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; காயமடைந்த செல்வி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in