CRIME
“எனக்கு அப்புறம் இவனும் அப்படி ஆகக்கூடாது… அதான் கொன்னுட்டேன்..” 10 வயது மகனை பலிகொடுத்துவிட்டு அசால்ட்டாக தூங்கிய தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
குஜராத்தில் மகன் தன்னைப்போல குறிசொல்பவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனைத் தந்தை பலி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம், சனந்த் தாலுக்காவில் விஞ்சியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நரேஷ் படேல். இவரது மனைவி பாரதிபென். இவர்களின் 10 வயது மகன் கரண் பள்ளியில் படித்து வந்தான். சுமார் 10 நாட்களுக்கு முன்பு, பாரதிபென்னுக்கும் நரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நரேஷ் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாரதிபென், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கரணுக்குத் தேர்வுகள் இருந்ததால், அவரை அவனது தந்தையிடம் விட்டுச் சென்றார். நவம்பர் 1 ஆம் தேதி மாலையில், பக்கத்து வீட்டுக்காரர் பாரதிபென்னை அழைத்து, நரேஷ் கரணை தாக்கியதாகக் கூறவே, அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் கணவரின் வீட்டிற்குப் பதறியடித்துச் சென்றார்.
பாரதிபென் அன்றிரவு 9 மணியளவில் வீட்டிற்குச் சென்றடைந்தார். அவர்களுடைய வீட்டருகே ஜோகனிமாதா என்ற கோவில் சன்னதி ஒன்று இருந்தது. அங்கே, கரண் உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் ஒரு கட்டிலில் கிடப்பதை பாரதிபென் கண்டார். பரிசோதித்துப் பார்த்தபோது அவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அருகிலிருந்த மற்றொரு கட்டிலில் தந்தை நரேஷ் ரத்தக் கறை படிந்த ஆடைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். பாரதிபென் தன் கணவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்டபோது, அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நரேஷ் கூறுகையில், அவருடைய தந்தை ஜோகனி மாதாஜியின் குறிசொல்பவராக இருந்ததாகவும், தானும் அவ்வாறே ஆகிவிட்டதாகவும், தனக்குப் பிறகு தன் மகன் ஒரு குறிசொல்பவராக ஆவதை தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே கோவிலுக்கு முன்னால் சிறுவன் கரணின் இரு கால்களையும் பிடித்து, அவனது தலையை இரண்டு மூன்று முறை தரையில் அடித்தும், தலையில் தடியால் தாக்கியும் கொன்றுவிட்டதாக நரேஷ் கூறியுள்ளார். அதன்பின் கட்டிலில் சிறுவனின் சடலத்தை கிடத்திவிட்டு, அருகில் இருந்த கட்டிலில் தானும் உறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். பாரதிபென் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவே, சனந்த் காவல்துறையினரும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலையில், கரணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. நரேஷ் மீது பாரதிபென் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நரேஷைக் கைது செய்துள்ள காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நரேஷ் படேல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
