LATEST NEWS
“கர்ப்பிணி போல நடித்த பெண் அதிகாரி” திரைப்பட பாணியில் நடந்த ஸ்டிங் ஆபரேஷன்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்… சட்டவிரோதக் கும்பல் சிக்கியது..!!
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், சட்டவிரோதக் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் மற்றும் கருக்கலைப்பு செய்யும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலை வீழ்த்த சுகாதாரத்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் அதிரடி ரகசிய ஆபரேஷனை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஜாம்கண்டி பகுதியின் உதவி ஆணையர் (AC) ஸ்வேதா பிதிகர் கர்ப்பிணிப் பெண் போலவும், மாவட்ட சுகாதார அதிகாரி (DHO) சுவர்ணா குல்கர்னி மற்றும் துணை இயக்குநர் டாக்டர் சோபா ஆகியோர் அவரது தாய் மற்றும் உறவினர் போலவும் வேடமணிந்து களமிறங்கினர்.
போலி நோயாளிகளாக மாறிய பெண் அதிகாரிகள், புரோக்கர்கள் மூலம் கருவின் பாலினத்தை அறிய அணுகியுள்ளனர். தகவலை உறுதி செய்த அதிகாரிகள், கர்நாடக எல்லையைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் ஜாட் தாலுகாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்குச் சென்று அதிரடி ரெய்டு நடத்தினர். அங்குத் தோட்டத்திற்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த போர்ட்டபிள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மிஷின்கள், சட்டவிரோதக் கருக்கலைப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளைக் கைப்பற்றினர்.
இந்த ஆபரேஷனின் போது நிக்கில் தேலி மற்றும் தானம்மா தேலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்தச் சட்டவிரோத கும்பலின் முக்கிய குற்றவாளியான டாக்டர் சஞ்சய் வாக்மோரே தலைமறைவாகியுள்ளதால் அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆபத்தான சூழலிலும் பெண் அதிகாரிகள் துணிச்சலாகத் தங்களது உருவத்தை மாற்றி, திரைப்பட பாணியில் நடத்தி முடித்த இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
