LATEST NEWS
திருவொற்றியூரே நடுங்கிப்போச்சு..! மாணவியைக் கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதால் வந்த வினை.. தம்பிக்கு ஸ்கெட்ச் போட்டு அண்ணனை அடித்துக் கொன்ற கொடூரம்.. ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது..!!
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞரான சுனில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அண்ணாமலை ரயில்வே கேட் வழியாக ஒரு கல்லூரி மாணவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு கும்பல் அந்த மாணவியை வம்புக்கு இழுத்துக் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சுனில் தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த மோதலால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், அன்றைய தினம் நள்ளிரவில் மது அருந்திவிட்டுப் பழிவாங்கும் நோக்குடன் மீண்டும் அதே ரயில்வே கேட் பகுதிக்கு வந்து சுனிலைத் தேடியுள்ளது. அந்த நேரத்தில் சுனிலின் அண்ணனான முனீஸ்வரன் (34) என்பவர் அந்த வழியாக நடந்து வந்துள்ளார். அவரை வழிமறித்த அந்தக் கும்பல் “சுனில் எங்கே?” என்று கேட்டு மிரட்டியுள்ளது; அதற்குத் தனக்குத் தெரியாது என்று முனீஸ்வரன் கூறவே, ஏற்பட்ட வாய்த்தகராறில் அந்தக் கும்பல் தங்களுக்குள் வைத்திருந்த தடியால் முனீஸ்வரனைத் தலையில் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்; ஆனால், அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சாத்தாங்காடு காவல் துறையினர், தம்பிக்குக் குறிவைத்து அண்ணனை அடித்துக் கொன்ற எண்ணூரைச் சேர்ந்த லோகேஷ்வரன் (21), ஜான்சன் (19), ஜெயந்தன் (19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
