CRIME
பகீர்… ஹோட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலி… விஷம் குடித்துக் சுருண்டு கிடந்த காதலன்… டெல்லியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..! பின்னணியில் என்ன நடந்தது..?!
டெல்லியின் லாகோரி கேட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 28 வயதான சிவானி என்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த சிவானியும், ராஜஸ்தானைச் சேர்ந்த அவரது காதலனான 29 வயது பிரகாஷ் சிங்கும் புதன்கிழமை அன்று லாகோரி கேட்டில் உள்ள ஹோட்டல் பிரின்ஸுக்கு வந்து அறை எடுத்துத் தங்கியுள்ளனர். காதலியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த பிறகு, காதலன் பிரகாஷ் சிங் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஹோட்டல் அறையில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாகச் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு இரத்த வெள்ளத்தில் காயங்களுடன் சிவானி கிடப்பதையும், பிரகாஷ் சிங் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் பரிசோதித்த மருத்துவர்கள் சிவானி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பிரகாஷ் சிங்கிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது நிலைமை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், காதலன் குணமடைந்த பிறகு அவரிடம் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இருவருக்கும் இடையே என்ன விவாதம் ஏற்பட்டது, கொலைக்கான காரணம் என்ன, கொலையைத் தொடர்ந்து அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பிறரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
