LATEST NEWS
#BREAKING: ஜெம் வீரமணி உள்ளிட்ட மூவர் மீது பாய்ந்தது குண்டாஸ்.. சற்றுமுன் அதிரடி..!
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் ஆர். வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குக் கல்வி நிதியுதவி அளிப்பதாகக் கூறி வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இந்தக் கொடூரக் குற்றங்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அறிவித்துள்ளது. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில், முக்கியக் குற்றவாளிகள் மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது வழக்கின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
