Uncategorized
முருங்கை மரத்தில்…! இத்தனை மகத்துவமா…! நம் முன்னோர்களின் செயல் பாட்டை பாருங்க ?
மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.
இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர். அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும். எளிதில் உடையும் தன்மை கொண்டது. இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.
முருங்கையின் அனைத்து பாகங்களுமே அதிக மருத்துவக் குணம் கொண்டது.
முருங்கை இலை
செரிமந்தம் வெப்பந் தெறிகுந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும்-மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே-நல்ல
முருங்கை யிலையை மொழி
– அகத்தியர் குணபாடம்
பொருள் –
முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.
முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.
உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.
இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.
முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.
முருங்கைப் பூ
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.
முருங்கைப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக் காய்
அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்தான்“ முருங்கைக் காய்.
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும்.
விதை
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.
இலைக்காம்பு
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.
முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.
முருங்கை வேர்
வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும்.
முருங்கைக்கீரை என்று சொன்னால் இது மிகச் சாதாரணமாக வளர்க்கக்கூடிய ஒரு அற்புதமான கீரை. அதாவது கீரைகளின் ராணி என்று சொன்னால் அது இந்த முருங்கைக் கீரையைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முருங்கைக்கீரை நிறைய நபர்களுக்கு ஒத்துவராது, சாப்பிடத்தோன்றாது, ருசியாகவும் இருக்காது என்று மிகப்பெரிய ஒரு புகார் பட்டியல் இந்த முருங்கைக்கீரை மீது உண்டு. ஏனென்றால் நாம் அப்படித்தான், மிக ருசியாக எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு பொறிக்க முடியுமோ, எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு வறுக்க முடியுமோ, எதுவெல்லாம் சாப்பிடுகிற பொழுது நாக்கிலிருந்து நீர் சொட்டுகிறதோ அதை மட்டுமே ரசிக்கக்கூடிய, அரவணைக்கக்கூடிய பக்குவமான மனசுக்கு சொந்தக்காரர்கள். ஆக சத்தான உணவுகளை புறந்தள்ளுவது என்பது நமக்கு கைவந்த கலை. அதே நிலையில் இருக்கிற பொழுதுதான் நமக்கு பல்வேறுபட்ட நோய்கள் வருகிறது என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக முருங்கைக்கீரையை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.