CRIME
“தப்பி ஓடுனா சோஷியல் மீடியால போடுவேன்…” அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி கொடூரமாக சித்திரவதை செய்த கணவன்.. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள நீண்டக்கரா பகுதியைச் சேர்ந்த நந்து (27) என்ற வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சு (24) என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணின் பெற்றோர் 25 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் சீதனமாக வழங்கியுள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நந்து மற்றும் அவரது பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு அஞ்சுவை மிரட்டத் தொடங்கினர். ஒரு மாதத்தில் நந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற நிலையில், மாமனார் மற்றும் மாமியாரின் வரதட்சணைக் கொடுமை தாங்காமல் அஞ்சு தன் தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கணவர் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, அஞ்சுவும் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சவுதி அரேபியா சென்ற சில நாட்களிலேயே நந்துவின் கொடூர முகம் வெளிப்பட்டது. கூடுதல் வரதட்சணை கோரி அஞ்சுவை குக்கர், பெல்ட் மற்றும் சார்ஜர் ஒயரால் நந்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அஞ்சுவின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் பறித்துக்கொண்ட அவர், “நீ வேலைக்குச் செல்லக் கூடாது” என்று கூறி சித்திரவதை செய்துள்ளார். மேலும், அஞ்சுவை ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, சவுதியை விட்டுத் தப்பியோ அல்லது கேரளாவுக்கோ செல்ல முயன்றால், அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டி சிறை வைத்துள்ளார்.
நந்துவின் கடுமையான பிடியிலிருந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு தப்பிய அஞ்சு, சவுதி அரேபியாவிலிருந்து கேரளா வந்து சேர்ந்தார். உடலில் பலத்த காயங்களுடன் இருந்த மகளை அவரது தாயார் கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இச்சம்பவம் குறித்து கொல்லத்தில் உள்ள சவரா காவல் நிலையத்தில் அஞ்சு அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கணவர் நந்து, மாமனார் தினேஷ், மாமியார் ஜெகதம்பா ஆகிய மூவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதியில் இருக்கும் நந்துவை இந்தியா கொண்டு வந்து கைது செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைக் காவல் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
