LATEST NEWS
“காற்று அடிக்கவில்லை, மழை வரவில்லை…” காரணங்களைக் கூறி ஏமாற்றுகிறதா அரசு..? உதயநிதி ஸ்டாலினின் பகிரங்கக் குற்றச்சாட்டு.. கிளம்பிய புதிய சர்சசை..!!
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்ததைக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று கூறி டெண்டரை ரத்து செய்த இந்த அரசு, தற்போது இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு மிக அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிக விலை மின் கொள்முதல் என்பது நிர்வாகத் தோல்வி மற்றும் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் முறைகேடான செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.
அரசின் இந்த முடிவை நிர்வாகத் திறனற்ற செயல் என்று சாடியுள்ள அவர், முதலமைச்சரின் செயல்முறைகளையும் கடுமையாகச் சாடியுள்ளார். “காற்று அடிக்கவில்லை, மழை வரவில்லை, பஞ்சாபிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது” என்றெல்லாம் காரணங்களைக் கூறி, ஆட்சியாளர்கள் கடந்த சில நாட்களாகச் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கியதே இத்தகைய ஊழல் ஒப்பந்தங்களை முடிப்பதற்காகத்தான் என்றும், இதற்காகவே பக்கத்து மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே மின் கட்டண உயர்வு என்ற பெயரில் மக்களிடம் சுமை ஏற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிக விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரத்தின் கூடுதல் நிதிச் சுமையையும் பொதுமக்கள் தலையிலேயே சுமத்தப் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விலைவாசி உயர்வில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ள இந்த அரசு, மக்களை மேலும் வதைக்கக் கூடாது என்றும், நாட்டின் நம்பர் 1 என்று கூறிக்கொண்டு ஏமாற்றும் இந்த ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தனது பதிவில் அவர் எச்சரித்துள்ளார்.
