LATEST NEWS
“பார்த்தாலே பதறுது” உயிருடன் குட்டி மானை விழுங்கி… அப்படியே கக்கிய ராட்சத மலைப்பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!!
பழங்குடியின கிராம குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து குட்டி மான் ஒன்றை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு, மீட்புப் பணியின் போது அதனை மீண்டும் வெளியே கக்கிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திஷினி என்ற பழங்குடியின குடியிருப்பில் காலை 11 மணியளவில் இந்த ராட்சத மலைப்பாம்பு புகுந்ததை அடுத்து, அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக பாம்பு மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவிலங்கு ஆர்வலரும் பாம்பு மீட்பாளருமான சிராஜ் ஷேக், குடியிருப்புப் பகுதிக்குள் இருந்த மலைப்பாம்பை மிகவும் எச்சரிக்கையுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டார். அந்த நேரத்தில், மலைப்பாம்பு தான் ஏற்கனவே முழுமையாக விழுங்கியிருந்த குட்டி நீலமான் (Nilgai) ஒன்றை மெதுவாகத் தனது வயிற்றில் இருந்து வெளியே கக்கியது. இதனைத் தொடர்ந்து, அந்த மலைப்பாம்பு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
மலைப்பாம்பு பிடிபட்டதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பேசிய சிராஜ் ஷேக், கிராம மக்கள் தங்களின் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகளைக் கண்டால் பயந்து போய் அவற்றை அடித்துக் கொல்லவோ அல்லது தாங்களாகவே பிடிக்கவோ முயலக் கூடாது என்று அறிவுறுத்தினார். இது போன்ற சமயங்களில் முறையான பயிற்சி பெற்ற பாம்பு மீட்பாளர்களுக்கோ அல்லது வனத்துறையினருக்கோ உடனே தகவல் தெரிவிப்பதே பாதுகாப்பானது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
