LATEST NEWS
சீனாவ பாருங்க பாஸ்.. கார்த்தி சிதம்பரம் போட்ட அந்த ஒற்றை ட்வீட்! கதறும் விஜய் ரசிகர்கள்.. கிளம்பியது புது பஞ்சாயத்து..! !
தெருநாய்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருப்பதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், சீன நகரங்களில் தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்பட்ட செய்தியை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடம் உள்ளதால், இது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை விமர்சித்து இடப்பட்ட பதிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வழக்கை தானாக முன்வந்து விசாரித்தது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 6.25 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும் 34 மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 2.64 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும் 17 மரணங்களும் பதிவாகி நிலைமை தீவிரமடைந்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் உள்ள தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், நாய்களுக்கான காப்பகங்களை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் நிலவுவதாகவும், களத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தது.
இந்தச் சூழலில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த பதிவு இரு வேறு கோணங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் இது மத்திய அரசுக்கு எதிரான பதிவு எனக் கூறினாலும், தெருநாய்களைப் பிடித்துக் கட்டுப்படுத்தும் பணி முழுக்க முழுக்க மாநில அரசின் பொறுப்பு என்பதால், இது விஜய் அரசுக்கு எதிரானது தான் என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
கூட்டணியில் இருந்துகொண்டே தவெக அரசை காங்கிரஸ் விமர்சிக்கிறதா என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த ட்வீட் பாஜகவுக்கு எதிரானதா அல்லது தவெக அரசைத் தாக்கிச் செய்யப்பட்டதா என்பது இணையத்தில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
