CRIME
“நாலாப்பக்கமும் சிதறிக்கிடந்த எலுமிச்சம்பழம்” சுடுகாட்டில் எரிந்த மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடு… பற்களை வைத்துத் துலக்கப்படும் மர்மம்… திருச்சியைக் உலுக்கிய சம்பவம்..!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில், மனித உடல் ஒன்று முழுவதுமாக எரிக்கப்பட்ட நிலையில் எலும்புகள் மட்டுமே மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி காலையில் சுடுகாட்டில் எலும்புகள் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடுகளும், அதன் அருகே எரிந்த நிலையில் பாசிமாலை, சிவப்பு நிறச் சேலைத் துண்டுகள் மற்றும் புதிய பச்சை நிற மண்பானை ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட உடற்கூறாய்வுப் பரிசோதனையில், மீட்கப்பட்ட எலும்புகள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணினுடையது என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்குத் திருமணமாகி குழந்தை பிறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். உடல் முழுமையாக எரி சாம்பலாகியுள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை செய்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட உண்மை கண்டறியும் சோதனைக்காகப் பெண்ணின் பற்கள் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சமீபநாட்களில் அந்த கிராமத்தில் யாரும் உயிரிழக்காததால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இந்த மர்ம மரண வழக்கில் துப்பு துலக்குவதற்காகத் திருச்சி சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அதிரடி உத்தரவின் பேரில், ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் திருச்சி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த புகார்களின் பட்டியலையும் சேகரித்துத் தீவிரமாக ஒப்பிட்டு விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நான்கு திசைகளிலும் எலுமிச்சம்பழங்கள் வைக்கப்பட்டிருந்தது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இது நரபலியாக இருக்குமோ என்ற அச்சத்தையும் கிளப்பியுள்ளது. அந்த எலுமிச்சம்பழங்களை அங்கே வைத்தது யார், கொலையை மறைத்து போலீசாரின் விசாரணையைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்பட்ட நாடகமா அல்லது மூடநம்பிக்கை சார்ந்த ஏதேனும் பில்லி சூனியக் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் தங்களது புலனாய்வைத் தொடர்ந்து வருகின்றனர்.
