LATEST NEWS
“பான் கார்டு கேட்க மாட்டாங்க…” நிம்மதி தரும் புதிய வருமான வரி விதி…. எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு விலக்கு…? முழு விவரம் இதோ…!!
புதிய வருமான வரி விதிகள் 2026-இன் படி, நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் அட்டை விதிகளில் மத்திய அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்பு பயன்பாட்டில் இருந்த ‘படிவம் 60’-க்கு மாற்றாக மிகவும் எளிமையான டிஜிட்டல் வடிவிலான புதிய ‘படிவம் 97’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், நுகர்வோரின் அன்றாட தேவைகளான வெளிநாட்டு நாணயக் கொள்முதல், வங்கி வரைவோலைகள் (டிடி) மற்றும் சில குறிப்பிட்ட ப்ரீபெய்ட் பணப் பரிவர்த்தனைகள் போன்ற குறைந்த ஆபத்துள்ள சிறிய நிதிச் செயல்பாடுகளுக்குப் பான் அட்டை சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எளிய நடைமுறை சாமானிய மக்களின் வங்கிச் சேவைகளை மேலும் விரைவுபடுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பெரும் பணப் பரிவர்த்தனைகள் மீதான கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறும்போதும், குறிப்பாகத் தங்க நகைகளை வாங்கும்போதும் பான் எண்ணைக் குறிப்பிடுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; இந்த இடங்களில் புதிய படிவம் 97-ஐ பயன்படுத்த இயலாது.
மேலும், புதிய டிமேட் கணக்குத் தொடங்குவதற்கும், கடன் அட்டைக்கு (கிரெடிட் கார்டு) விண்ணப்பிப்பதற்கும், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் பான் அட்டை மிக அவசியமாகும். எனவே, பொதுமக்கள் தங்களது பான் மற்றும் இதர அடையாள ஆவணத் தகவல்களைத் தற்போதைய விதிகளுக்கு ஏற்பப் புதுப்பித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
