LATEST NEWS
அடக்கடவுளே இதென்ன கொடுமை..? ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குத் தனித்தனி தேர்வறையா..?! வங்கித் தேர்வில் நேர்ந்த வினோதம்..!!”
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று வீணா மற்றும் வாணி என்ற இரட்டைச் சகோதரிகள் தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்தனர். இவர்களைப் பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்ட நிலையில், நிலோபர் மருத்துவமனையிலும் பின்னர் அமீர்பேட்டை அரசு குழந்தைகள் இல்லத்திலும் வளர்ந்தனர். தலைப்பகுதியில் முக்கியமான ரத்தநாளங்கள் ஒட்டியுள்ளதால், அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தானது என்பதால் இவர்கள் இதுவரை பிரிக்கப்படாமல் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
உடல் சவால்களைக் கடந்து பள்ளிப் படிப்பிலும், பிளஸ்-2 தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இவர்கள் சாதனை படைத்தனர். அதனைத் தொடர்ந்து பி.காம் பட்டப்படிப்பைச் சிறப்பாக முடித்த வீணா-வாணி, தற்போது சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆவதற்காகத் தீவிரமாகப் படித்து வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்டேட் வங்கித் தேர்வுக்கு இவர்கள் விண்ணப்பித்துத் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், ஒட்டிப்பிறந்த இவர்கள் இருவருக்கும் தேர்வு நிர்வாகம் தனித்தனித் தேர்வரைகளையும், தனித்தனி இருக்கைகளையும் ஒதுக்கியுள்ளதால் தேர்வை எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரும் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின் கீழ் அவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே தேர்வு மையத்தை மாற்றித் தர வேண்டும் என்றும் அவர்களின் முன்னாள் விரிவுரையாளர்களும் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
