CRIME
“ஐ.டி. ஆபீசர் நாங்க…” நம்பி ஏமாந்த குடும்பம்..! ரூ.2 கோடி தங்க நகைகளுடன் 13 நிமிடத்தில் எஸ்கேப்பான மர்மக் கும்பல்…. பட்டப்பகலில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் நசீராபாத் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், டாக்ஸி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் 7 நபர்கள் வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிலர் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம் நசீராபாத் சாதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தில்வாரா பைபாஸில் உள்ள மகேஷ் விஹார் காலனி ஆகும். அங்கு வசிக்கும் மோட்டார் பார்ட்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழிலதிபர் அணில் மகேஸ்வரி, அவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் வழக்கம்போல் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் வீட்டில் பெண்கள், தொழிலதிபரின் மகன் கார்த்திக் மற்றும் வீட்டுப் பணிப்பெண் மட்டுமே இருந்தனர். காரில் வந்த 7 பேரில் 5 பேர் வீட்டிற்குள் நுழைந்து, தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி சோதனை என்ற பெயரில் அறைகளை ஆய்வு செய்யத் தொடங்கினர்.
அப்போது ஒரு அறையில் இருந்த லாக்கரைத் திறந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர். 13 நிமிடங்களுக்குள் நகைகளைச் சுருட்டிக்கொண்டு கொள்ளையர்கள் வெளியேறியபோது, தொழிலதிபரின் மகன் கார்த்திக் காரின் அருகில் சென்று அரசு நடவடிக்கைக்கான ரசீது கேட்டார். ஆனால் கொள்ளையர்கள் காரை வேகமாக ஓட்டித் தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ராதேஷ்யாம் சௌத்ரி தலைமையிலான படையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பல இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
