LATEST NEWS
“டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவரா நீங்க…? டெங்கு காய்ச்சலால் காத்திருக்கும் ஆபத்து..! எச்சரிக்கும் முன்னணி மருத்துவ நிபுணர்கள்..!!”
இந்தியாவின் முன்னணி நீரிழிவு நிபுணர் டாக்டர் ஜோதிதேவ் கேசவதேவ் தலைமையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி, டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்குச் சாதாரண டெங்கு காய்ச்சல் கூட தீவிரமான பாதிப்பாக மாறும் அபாயம் அதிகம் உள்ளது. நீண்ட காலமாக ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதபோது, அது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தி, ரத்த நாளங்களையும் சேதப்படுத்துகிறது. இதனால், உடலுக்குள் நுழையும் டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்து, நோய் பாதிப்பு தீவிரமடைகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் அளவுக்கு அதிகமாகச் செயல்படுவதால் “சைட்டோகைன் ஸ்டார்ம்” எனப்படும் மிகை அழற்சி நிலை உருவாகலாம். இது உட்புற ரத்தக்கசிவு, டெங்கு ஹெமரேஜிக் காய்ச்சல் மற்றும் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் திடீரெனக் குறைவதோடு, பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, அதிக காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, மூச்சுத்திணறல், ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் சர்க்கரை நோயாளிகளுக்கு, வழக்கமான நீரிழிவு சிகிச்சையின் ஒரு பகுதியாக டெங்கு தடுப்பூசியையும் இணைக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனுடன், சர்க்கரை நோயாளிகள் ரத்தச் சர்க்கரையைச் சீராகப் பராமரிப்பதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். மேலும், வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்க விடாமல் கொசு இனப்பெருக்கத்தைத் தடுப்பது, கொசு வலை மற்றும் விரட்டிகளைப் பயன்படுத்துவது, முழுக்கை ஆடைகளை அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் மூலமும் சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவர் ஆலோசனை பெறுவதன் மூலமும் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
