LATEST NEWS
“கண்ணுக்குத் தெரியாம செம்ம கமிஷன் டீல்..?!” கைதிகள் வயித்துல கை வைக்கும் தவெக அரசு..? ரகுபதி வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!
சிறைத்துறை மூலம் நடத்தப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மற்றும் ‘பிரிசன் பஜார்’ விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு, தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் சிறைச்சாலைகள் சீர்திருத்தப் பணிகளில் சிறந்து விளங்கியதாகவும், கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை மூலம் கைதிகளின் குடும்பங்களுக்கு கணிசமான வருமானம் கிடைத்ததுடன் அரசுக்கும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டித் தரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போதைய சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இவற்றைக் கண்மூடித்தனமாக மூடிவிட்டு, தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
‘மக்கள் பணத்தை தொட மாட்டோம்’ என்று கூறிக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாத இடங்களில் கமிஷன் அடிப்பதில் த.வெ.க. அரசு தீவிரம் காட்டுவதாக ரகுபதி கடுமையாக சாடியுள்ளார். கைதிகள் தப்பிச் செல்கிறார்கள் என்ற பொய் வாதத்தை முன்வைத்து இவற்றைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் வரவிருக்கும் இடைத்தேர்தல்களைப் பற்றியே இந்த அரசு சிந்திப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறப்பான திட்டங்களுக்குத் தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டி விழா நடத்துவதாகவும் ரகுபதி சுட்டிக்காட்டியுள்ளார். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றத் காவல்துறையைப் பயன்படுத்தாமல், அரசியல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த மட்டுமே பயன்படுத்துவதால் மாநிலத்தில் குற்றங்கள் பெருகுவதாகவும், வெறும் ரீல்ஸ் மூலமாகவே ஐந்தாண்டு கால ஆட்சியை ஓட்டிவிடலாம் என்று நினைக்கும் இந்த அரசுக்கு மக்கள் இடைத்தேர்தல்களில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
