CRIME
அடப்பாவமே.. வாடிக்கையாளர் போல வந்த ‘ரோமியோ-ஜூலியட்’.. 5 செகண்டில் கடைக்காரரையே அலறவிட்ட ஜோடி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் CCTV வீடியோ…!!
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், வாடிக்கையாளர்களைப் போல மொபைல் கடைக்குள் நுழைந்த ஒரு இளைஞரும் யுவதியும், கண் இமைக்கும் நேரத்தில் ரூ.25,000 மதிப்புள்ள போனைத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவின் சின்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காம்தா பகுதியில் உள்ள அனுமன் மார்க்கெட்டில் ‘ஓம் மொபைல் ரிப்பேரிங்’ என்ற கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு நேற்று பொருட்கள் வாங்குவது போல ஒரு வாலிபரும் பெண்ணும் வந்துள்ளனர். கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பிய அந்த வாலிபர், அங்கிருந்த விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்றை நைசாக எடுத்துத் தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
போனை வாங்கிய அந்தப் பெண், அடுத்த நொடியே கடைக்காரருக்குச் சந்தேகம் வராதவாறு அங்கிருந்து நழுவி வெளியேறியுள்ளார். இந்தத் திருட்டு நாடகம் முழுவதையும் அந்த வாலிபர் மிக லாவகமாக அரங்கேற்றியதால், கடையில் இருந்தவருக்கு ஆரம்பத்தில் எந்தச் சந்தேகமும் எழவில்லை. அவர்கள் சென்ற பிறகு போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதுதான் இவர்களின் கைவரிசை அம்பலமானது. இந்தத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சின்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
