CRIME
பேஸ்புக் பதிவால் வந்த வினை… சவூதியில் தூக்குக் கயிறு வரை சென்ற இலங்கைத் தமிழ் இளைஞர்.. உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி திருப்பம்..!!
சவூதி அரேபியாவில் பேஸ்புக் பதிவு ஒன்றில் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனுக்கு (24) விதிக்கப்பட்ட மரண தண்டனையைச் சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இலங்கையின் எம்பாரே பகுதியைச் சேர்ந்த இளம் பொறியியலாளரான சிவராசா, சவூதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இலங்கையில் நடைபெற்ற இந்து புனித யாத்திரையின் போது உருவான சமூக வலைதள மத விவாதத்தில், இவர் பதிவிட்டுப் பின்னர் நீக்கிய ஒரு கருத்துக்காக கடந்த செப்டம்பரில் சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்தக் கடுமையான தீர்ப்பு இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க மற்றும் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவூதி வெளியுறவு அமைச்சகத்திற்குத் தொடர் கோரிக்கைகளை விடுத்தனர். சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் இந்தத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தன. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பயனாக, சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13 அன்று சிவராசாவின் மரண தண்டனையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து தீர்ப்பளித்தது.
சிவராசாவின் உயிருக்கு ஏற்பட்டிருந்த பேராபத்து நீங்கி, இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், சவூதி அரேபியாவின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதா அல்லது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்துத் தூதரக அதிகாரிகள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை.
