LATEST NEWS
மக்களே உஷார்… ஒரே நாளில் ரூ. 6,000 கோடி இழப்பா..?! தமிழக அரசுக்கு வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் நிதி அபாயங்கள் குறித்து பேரிடர் தாங்கு திறன் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரே ஒரு கடும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் கூட, மாநிலத்திற்கு நேரடியாக ரூ.6,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளம் மற்றும் புயல் போன்ற சீற்றங்களின் போது மின்சார உட்கட்டமைப்பு, சாலைகள், பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவதுடன், அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
கடந்த காலத்தில் 2011-ல் தாக்கிய தானே புயல், 2015 சென்னை வெள்ளம், 2018 கஜா புயல் ஆகியவற்றால் மின்சார உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக 2015 சென்னை வெள்ளத்தின் போது 6 மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்; 18 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர் மற்றும் 1.16 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்து, சுமார் ரூ.14,502 கோடி வரை இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2004 சுனாமி போன்ற பெரிய பேரிடர்கள் ஏற்பட்டால், மாநில அரசின் மொத்தச் செலவினம் சுமார் ரூ.1,685.73 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சமூக சேவைகளுக்கான கூடுதல் செலவினமாக ரூ.205.55 கோடியும், நிவாரண உதவிகளுக்காக ரூ.94.48 கோடியும் அடங்கும் என்பதோடு, மாநிலத்தின் உள்நாட்டுக் கடன் தேவையும் ரூ.291.62 கோடி வரை அதிகரிக்கலாம் என ஆய்வு எச்சரிக்கிறது. பேரழிவுக்குப் பிந்தைய உடனடியாக ஏற்படும் நிதி நெருக்கடியைத் தாண்டி, மக்களின் வாழ்வாதார இழப்பும் பொருளாதாரச் சிக்கல்களும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
