LATEST NEWS
அமெரிக்காவில் ரூ.8 லட்சம் சம்பளம்… ஆனாலும் ஜீவனாம்சம் வேணுமா..? மனைவியின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..!!
மும்பையைச் சேர்ந்த கணவரை விட அதிக சம்பளம் ஈட்டும் அமெரிக்காவில் வசிக்கும் மனைவி, தன் கணவரிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கோரிய மனுவை பம்பாய் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. நியூஜெர்சியில் வசித்து வரும் அந்தப் பெண், புதுடெல்லியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி மாதம் சுமார் ரூ.8 லட்சம் சம்பாதிக்கிறார். இது அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாகும். வெளிநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகம் என்பதற்காக மட்டுமே ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே அடங்கிய அமர்வு தெளிவாகத் தெரிவித்தது.
கணவரும் தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே பணியாற்றி வரும் நிலையில், தற்போதைய சூழலில் ஐடி துறையில் அதிகரித்து வரும் கடுமையான போட்டியினாலும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியினாலும் அவரது வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரக்கூடும் என்ற முக்கிய அம்சத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மாதம் ரூ.1 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையே உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
இத்தம்பதியரின் மூத்த குழந்தை தந்தையின் பராமரிப்பிலும், இளைய குழந்தை தாயின் பராமரிப்பிலும் உள்ளனர். மனைவியின் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்த குடும்ப நல நீதிமன்றம், வழக்குச் செலவுக்காக மனைவிக் ரூ.25,000 வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டிருந்தது. மனைவி சுயசார்புடன், கணவரை விட அதிக வருமானம் ஈட்டி வரும் நிலையில், இந்த இடைக்கால ஜீவனாம்சக் கோரிக்கை சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்று கூறி நீதிமன்றம் மனுவை முடித்து வைத்தது.
