CRIME
“என் பொண்ணு மேலயே கை வச்சியா..?!” ஆத்திரத்தில் 2 வது கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவி செய்த கொடூர காரியம்.. பரபரப்பு பின்னணி..!!
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம், அக்கன்னபேட் மண்டலத்தில் உள்ள சவலாலா தண்டா பகுதியில், மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது கணவனை, மரத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பானோத்து ராஜேஸ்வரி (33) என்பவரின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகளை வளர்த்து வந்தார். பின்னர் ஜனகான் பகுதியைச் சேர்ந்த பகவான் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்; இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ராஜேஸ்வரியின் முதல் கணவருக்குப் பிறந்த மகள், உஸ்னாபாத்தில் உள்ள கே.ஜி.பி.வி பள்ளியில் படித்து வருகிறார்.
பள்ளி விடுமுறையில் வீட்டுக்கு வந்த அந்தச் சிறுமி, அப்பா தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகத் தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரி தனது கணவரைக் தட்டிக்கேட்டபோது, தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 11 அன்று இந்த விவகாரத்தைச் சுமுகமாகத் தீர்க்க ராஜேஸ்வரியின் உறவினர்கள் பகவானை வரவழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, ஆத்திரமடைந்த உறவினர்கள் பகவானை ஒரு மரத்தில் கட்டி வைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியதில் பகவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பானோத்து ராஜேஸ்வரி மற்றும் கொலையில் தொடர்புடைய உறவினர்களைக் கைது செய்துள்ளனர்.
