CRIME
சிக்னலில் காத்திருந்த மரணம்.. கணவன் கண் முன்னே பேருந்து சக்கரத்தில் சிக்கிய மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மலக்பேட் டி-மார்ட் சிக்னல் அருகே நேற்று மாலை 3:50 மணியளவில் நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், 25 வயதான இல்லத்தரசி பி. லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரூநகர் பகுதியைச் சேர்ந்த லாவண்யா, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் எல்.பி. நகரிலிருந்து சாடர்காட் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை அவரது கணவர் ஓட்டிச் சென்ற நிலையில், டி-மார்ட் சிக்னல் அருகே சென்றபோது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நழுவி சாலையில் விழுந்தது. அப்போது துரதிர்ஷ்டவசமாக லாவண்யா அருகில் கடந்து சென்ற அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தின் அடியில் சிக்கி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதிதான் லாவண்யாவிற்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபத்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சாடர்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி, சிசிடிவி ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
