LATEST NEWS
அடேங்கப்பா.. பெரிய மூட்டையோடு வந்த பாஸ்டர்… ஷோரூம் ஊழியர்களுக்குக் கொடுத்த 2 மணி நேர வேலை.. ரூ.1.23 லட்சத்திற்குப் பைக் வாங்கிய நூதன முறை.. நெட்டிசன்களை மிரளவைத்த சம்பவம்..!1
தெலங்கானா மாநிலம் லக்செட்டிபெட்டைச் சேர்ந்த 51 வயதான தேவாலய போதகர் பி. ரவி ஜோசப், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சேமித்து வைத்த 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தை வாங்கிய சுவாரஸ்யமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அன்றாடச் செலவுகளில் இருந்து சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தைக் கொண்டு, தனக்கென ஒரு சொந்த இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை அவர் இதன் மூலம் நிறைவேற்றியுள்ளார். போதகர் கொண்டு வந்த நாணய மூட்டைகளைக் கண்டு வியந்த வாகனக் காட்சிப்பகத்தின் ஊழியர்கள், அந்த 10 ரூபாய் நாணயங்களை முழுமையாக எண்ணி முடிப்பதற்கே சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அரிய சேமிப்பு முயற்சி மற்றும் வைராக்கியம் குறித்த செய்தியும், ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. வங்கிகளிலோ அல்லது கடைகளிலோ 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்குச் சிலர் தயக்கம் காட்டி வரும் தற்போதைய சூழலில், நாணயங்களை மட்டுமே கொண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய வாகனத்தை வாங்கிய போதகர் ஜோசப்பின் இந்தத் தனித்துவமான செயல், முறையான சேமிப்புப் பழக்கம் இருந்தால் எந்தவொரு பெரிய கனவையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
