LATEST NEWS
“என்ன கொடுமை சார் இது..! டெல்லியில் யாருக்குமே பாதுகாப்பில்லையா…?” வெறும் 10 நிமிடத்தில் முடிந்த பகீர் திருட்டு… தந்தை வீட்டில் நடந்த கொள்ளையால் கொந்தளித்த அல்கா லம்பா..!!
மேற்கு டெல்லியின் தாகூர் கார்டனில் உள்ள அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவரான அல்கா லம்பாவின் 88 வயதான தந்தையின் வீட்டில், முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் புகுந்து ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையினருக்கு காலை 10:23 மணிக்கு பிசிஆர் மூலம் தகவல் கிடைத்தது. உடனடியாக தாகூர் கார்டன் வீட்டை வந்தடைந்த ராஜோரி கார்டன் காவல் நிலையக் குழுவினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.
அல்கா லம்பா தெரிவித்த தகவல்களின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:15 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து, தந்தையின் வாழ்நாள் சேமிப்புப் பணம் மற்றும் நகைகளை வெறும் 10 நிமிடங்களில் திருடிக் கொண்டு ஒரே பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த சுமார் ரூ.1.75 லட்சம் ரொக்கம், ஒரு ஜோடி தங்கக் கம்மல், ஒரு தங்கச் சங்கிலி மற்றும் ஒரு வைரம் பதித்த மோதிரம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த முழு சம்பவமும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அல்கா லம்பாவின் வயதான தந்தை காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளார். இது குறித்து அல்கா லம்பா தனது சமூக வலைத்தளத்தில் கவலை தெரிவித்ததுடன், தலைநகர் டெல்லியில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை நினைத்தால் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது கஞ்சன் சதா என்பவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பிச் சென்ற கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
