LATEST NEWS
“இவருதான் ரியல் ஹீரோ..! அந்த பெல் மட்டும் அடிக்கலைனா அவ்வளவுதான்…” நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்..! 1,643 குழந்தைகளின் உயிரைக் காத்த தலைமை ஆசிரியர்..! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!!
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள த்ரிபுவன் த்ரிஷூலி மேல்நிலைப் பள்ளியில் அடித்த பள்ளி மணி, அன்று மாணவர்களை வகுப்பறைக்கு அழைப்பதற்காக அல்ல; மாறாக அவர்களின் உயிரைக் காக்கும் எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது. பள்ளியின் தலைமை ஆசிரியரும், 47 வயதான ஆங்கில ஆசிரியருமான ராஜேந்திர தாவாடி, ஆற்று வெள்ளப்பெருக்கு குறித்து முன்கூட்டியே கிடைத்த போன் அழைப்பு மற்றும் பெற்றோர் ஒருவரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உடனடியாகச் செயல்பட்டார். அவர் பள்ளியின் மணியை அடித்து, ஆசிரியர்கள் மற்றும் 1,643 மாணவர்களை உடனடியாக வகுப்பறைகளை விட்டு வெளியேறி உயரமான பாதுகாப்பான இடத்திற்கு ஓடுமாறு உத்தரவிட்டார். மேலும், பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளையும் உடனடியாகத் திரும்பிச் செல்லப் பணித்தார்.
தலைமை ஆசிரியர் தாவாடியின் விரைவான இந்த முடிவால், மாணவர்கள் அனைவரும் போதி மரத்தின் அடியில் பாதுகாப்பாகத் தஞ்சம் அடைந்த சில நிமிடங்களிலேயே, பயங்கரமான வெள்ளப்பெருக்கு அப்பகுதியைத் தாக்கியது. அந்தப் பிரம்மாண்டமான 3 அடுக்கு பள்ளி கட்டிடம் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அனைத்து மாணவர்களும் காயமின்றித் தப்பிய நிலையில், துரதிர்ஷ்டவசமாகப் பள்ளி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். சமூகவியல் ஆசிரியர் சந்தோஷ் பரியார் (32) தனது அறைக்கு காலை உணவு சமைக்கச் சென்றபோதும், துப்புரவாளர் சுல்தான் லாமா பள்ளிக் கதவை மூடச் சென்றபோதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லாங்டாங் லிருங் பகுதியில் நிகழ்ந்த பனி மற்றும் பாறைகளின் திடீர் சரிவே இந்த பயங்கர வெள்ளப்பெருக்குக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சரிவு 50 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அலைகளை உருவாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பள்ளி மொத்தமாக அழிந்துபோன போதிலும், ராஜேந்திர தாவாடியின் சமயோசிதமான செயலால்தான் 1,643 குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. தனது துணிச்சலான நடவடிக்கையால் உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் தாவாடி, “அந்தச் சூழ்நிலையில் இதைத் தவிர நான் வேறு என்ன செய்திருக்க முடியும்?” என்று பணிவுடன் கூறுகிறார்.
