LATEST NEWS
EPS-க்கு சிக்கல்..! ஆட்டத்தை தொடங்கும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி… கைமாறும் அதிமுக… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்வி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மீண்டும் ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், கட்சிக்குள் உள்ள அதிருப்தி முகாம்கள் மீண்டும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கனவே போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
இடைத்தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்க எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரகசியக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தங்களுக்கு ஆதரவான நிர்வாகிகளுக்குத் தூது அனுப்பப்பட்டு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்த இந்த அதிருப்தி குழுவினர், தற்போது ஒட்டுமொத்தமாக இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், சட்டமன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்கவும் அதிருப்தி குழுவினர் ஒரு கணக்கீடு வைத்துள்ளனர். அதிமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் 28 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே தங்களால் சட்டப்பூர்வமாகத் தனி அணியாகச் செயல்பட முடியும் அல்லது கட்சியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர்கள் கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த வியூகத்தின் ஒரு பகுதியாக, தங்களின் அடுத்தகட்ட அரசியல் திட்டங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கோரவும் மற்றும் கட்சியின் தற்போதைய நிலை குறித்து முறையிடவும் டெல்லி செல்ல அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
