LATEST NEWS
“பாத்ரூம் கண்காணிக்க தனியா ஒரு மந்திரிங்களா..?” உதயநிதி ஸ்டாலினின் வெறித்தனமான கவுண்டர்.. சட்டசபையில் நிலவிய உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்வாரியத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 38 ஹார்டு டிஸ்க்குகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய, தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கியமான ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதைச் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வாரியம் சந்தித்த பிரச்சினைகளை ஒரே வரியில் விளக்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது, கடந்த 2021-ல் மின்துறை அமைச்சராக இருந்தவரைக் குறிப்பிடும் வகையில், அமைச்சர் நிர்மல்குமார் ‘கரூர் கம்பெனி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது அவையில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதா என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். அமைச்சர் நிர்மல்குமார் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததால் அவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட, சபாநாயகர் ‘கம்பெனி’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரின் தனிப்பட்ட விமர்சனத்தை வன்மையாகச் சாடினார். தமிழகத்தில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளாரா என அவர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
