LATEST NEWS
“நாங்க விக்கலனா வேறு யாருமே விக்கக்கூடாது” உலக நாடுகளை மிரட்டும் ஈரான்… இனி என்ன நடக்கும் தெரியுமா..? டிரம்ப் பகீர் எச்சரிக்கை..!!
ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது 13-வது நாளாகத் தொடர்ந்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய கடல்வழியாகத் திகழும் இப்பகுதியில், தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டி சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது. இதற்குச் சம்மதிக்காத அமெரிக்கா, சர்வதேசக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ட்ரோன் தளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, “தாங்கள் எண்ணெய் விநியோகம் செய்ய முடியாவிட்டால், உலகின் எந்தவொரு நாடும் எண்ணெய் விநியோகம் செய்ய முடியாது” என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா தொடர்புடைய என்செலியா மற்றும் லேய்லா ஆகிய இரண்டு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது செங்கடலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். உலக வர்த்தகத்தில் 12 சதவீதப் பங்கைக் கொண்ட ‘பாப் எல்-மந்தேப்’ ஜலசந்திப் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பினர் நடத்திய இந்தத் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்குக் கடுமையான ராணுவ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹவுதி அமைப்பினர் ஈரானின் பிரதிநிதிகளாகச் செயல்படுவதால், இனி அவர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான முழுப் பொறுப்பையும் ஈரானே ஏற்க வேண்டியிருக்கும் என்றும், இரு தரப்பு மீதும் மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கை பாயும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார். இந்தத் தொடர் மோதல்கள் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டாலர்களைத் தாண்டி விற்பனையாவதால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
