LATEST NEWS
“சொந்த மக்களை அகதிகளாக்க முடியாது..!” 5 வருஷமாகப் பறித்த நிலத்தை என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்..? இபிஎஸ் கேள்விக்குக் தவெக அரசு கொடுத்த மரண மாஸ் பதில்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர்நிலைகள் அழிந்து சென்னை மாநகரத்திற்குள் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும்” என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில், பரந்தூர் நிலங்கள் முப்போகம் நெல் விளையக்கூடிய வளமான விவசாய பூமி என்பதால் மக்களின் சுற்றுச்சூழல் கவலைகளை ஏற்று இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அங்குள்ள 1500-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கம்பன் கால்வாயையும் அழிப்பது கேரள விமான நிலைய வெள்ள பாதிப்பைப் போன்ற பேரழிவை இங்கும் உருவாக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
விமான நிலையத்திற்காக ஐந்து ஆண்டுகளாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, அங்கு மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத மாற்றுத் தொழில் திட்டங்கள் தொடங்கப்படும் என்று தவெக அரசு விளக்கம் அளித்துள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது என்றும், சொந்த நாட்டு மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது என்பதால் தான் தவெக அரசு இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் நிர்மல்குமார் பேரவையில் தெரிவித்தார். இதற்குப் பாமக உறுப்பினர் கணேஷ்குமார் சட்ட விதிகளின்படி நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியதற்கு, குறிப்பிட்ட திட்டத்தைச் செயல்படுத்த முடியாத பட்சத்தில் மற்ற பொதுத் திட்டங்களுக்கு அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யச் சட்டத்தில் இடம் உள்ளது என்று அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்தார்.
