LATEST NEWS
“1000 ஏக்கர் ஆக்கிரமிப்பு.. மலையை உடைச்சு.. சிறுத்தைகளை கொன்னுட்டாங்க” ஜி ஸ்கொயர் மீது பாய்ந்த எஸ்பி வேலுமணி.. சட்டசபையில் அதிர்ச்சிப் புகார்..!!
ஜி ஸ்கொயர் (G Square) நிறுவனம் மீது சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மிகப்பெரிய படுபயங்கரமான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுப் பேசியுள்ளார். கோவை மாவட்டத்தில் இந்த நிறுவனம் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, அங்குள்ள பெரிய மலையையே உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் பெருமளவில் மண் எடுக்கப்பட்டுள்ளதுடன், அரசு நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சட்டத்திற்குப் புறம்பான முறையில் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் அப்பகுதியில் வசித்து வந்த மான்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் எஸ்பி வேலுமணி வேதனை தெரிவித்தார்.
இயற்கையையும் வனவிலங்குகளையும் அழித்துச் செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தின் மீது முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
