LATEST NEWS
“பதவியெல்லாம் தூக்கி எறியுங்க.. சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் சேர்க்கணும்..” இபிஎஸ்ஸுக்கு எஸ்.பி.வேலுமணி கொடுத்த அதிரடி ‘செக்’.. மீண்டும் வெடித்த அதிமுக கலகம்..!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அஇஅதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர் விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர் ஒன்றிணைந்து தனி அணியாகச் செயல்பட்டனர். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகத் தங்களது வாக்குகளைப் பதிவிட்டனர். இதனால் சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். அதன்பின்னர் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலர் மீண்டும் இணக்கமாகச் சென்ற நிலையில், அவர்களுக்குக் கட்சியில் வேறு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகள் மீண்டும் வழங்கப்படாததால், புதிய பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என அவர்கள் அறிவித்தனர். இதனிடையே, விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்த உட்கட்சி பூசல் விவகாரம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற அதிரடிக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் காலம் முதல் உழைத்த நிர்வாகிகளைத் தொடர்ந்து நீக்கும் நடவடிக்கையைக் கைவிட்டுப் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும், தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளைத் திரும்ப அளித்தால் மட்டுமே புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
