LATEST NEWS
ஹாலிவுட் பட பாணியில் நிஜக் கொடூரம்… உடைந்த எலும்புகளுடன் 7,000 அடி மலை ஏறி தப்பிய அமெரிக்க அதிகாரி… ஈரானில் 50 மணி நேர திக் திக் போராட்டம்..!!
அமெரிக்காவின் 30 மில்லியன் டாலர் மதிப்புள்ள F-15E போர் விமானம் ஈரானிய தோள்பட்டை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஒன்றை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கியது. இந்த தாக்குதலில் விமானத்தில் இருந்த இரு அதிகாரிகள் அவசரநிலை காரணமாக பாராசூட் மூலம் ஈரானிய எல்லைக்குள் குதித்தனர். அதில் ‘ஆல்பா’ என்று அழைக்கப்படும் விமானி சில மணி நேரங்களிலேயே மீட்கப்பட்டார். ஆனால் ‘பிராவோ’ என்ற ஆயுதக் கட்டுப்பாட்டு அதிகாரி ஈரானிய மலைப்பகுதியில் தனியாக மாட்டிக்கொண்டார்.
விமானத்தில் இருந்து குதிக்கும்போது பாராசூட் சேதமடைந்ததால், பிராவோ மிக வேகமாக தரையில் விழுந்து அவரது முதுகு, ஒரு கை மற்றும் தோள்பட்டை எலும்புகள் உடைந்தன. எதிரி நாட்டின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, உடைந்த எலும்புகளுடன் கடுமையான வலியைப் பொறுத்துக் கொண்டு, ஒரு பள்ளத்தாக்கிலிருந்து 7,000 அடி உயரமுள்ள மலைப்பகுதிக்கு அவர் ஏறிச் சென்று மறைந்தார். ஈரானிய ராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தொலைக்காட்சிகளில் தோன்றிவிடக் கூடாது என்ற உந்துதலே தன்னை நகர்த்தியதாக அவர் பின்னர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு நள்ளிரவில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டவுடன், வீரர்களை உயிருடனோ அல்லது உடலாகவோ மீட்டே தீர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக 46 ஆண்டுகளில் முதல்முறையாக சுமார் 90-க்கும் மேற்பட்ட அமெரிக்க தரைப்படை வீரர்கள் ஈரானிய மண்ணில் நேரடியாக இறக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான விமானப்படை வீரர்களும், ஆயிரக்கணக்கான ஆதரவுப் பணியாளர்களும் இந்த பிரம்மாண்ட மீட்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர்.
உணவோ, தண்ணீரோ இன்றி சுமார் 50 மணி நேரம் ஈரானிய மலை இடுக்கில் பதுங்கியிருந்த பிராவோ, இறுதியாக அமெரிக்கத் தளத்திற்குத் தனது இருப்பிடச் செய்தியை அனுப்பினார். அமெரிக்க சிஐஏ உளவு அமைப்பு ஈரானியப் படைகளை திசைதிருப்பும் ரகசியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதுடன், மீட்புக் குழுவினர் வருவதற்கு முன் ட்ரோன்கள் மூலம் அங்குள்ள ஈரானியப் படைகள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. அதன் பின்னரே பிராவோ பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டார்; இதனை ஒரு “நவீன கால அதிசயம்” என அவர் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.
