LATEST NEWS
அய்யயோ காப்பாத்துங்க..! நடுவானில் மரண பயம்.. டயர் கழன்றதால் விமானக் கூரை உடைந்து விழுந்து விபத்து – பயணிகள் அலறல்..!
ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கி புறப்பட்ட செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம், நடுவானில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் லேண்டிங் கியரில் இருந்த சக்கரத்தின் டயர் கழன்று விழுந்ததால், எஞ்சின் பகுதி சேதமடைந்து விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாகக் குலுங்கத் தொடங்கியது.
இந்தக் கடுமையான அதிர்வின் காரணமாகப் பயணிகள் அமர்ந்திருந்த கேபின் பகுதியின் மேல் கூரை உடைந்து சரிந்து விழுந்ததுடன், மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் பயணிகள் மீது விழுந்தன. இதனால் மரண பயத்தில் பயணிகள் அலறியடித்துக் கதறிய நிலையில், விமானிகளின் துரிதமான செயல்பாட்டால் விமானம் மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே பத்திரமாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், டயர் கழன்றது மற்றும் கூரை சரிந்தது குறித்து ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
