LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! இரும்புக் கூண்டுகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்கள்… அம்பலமான பகீர் உண்மை..!!
உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்தல் என்பது பெரும் அரசியலாக மாறியுள்ளது. ஒருபுறம் புலம்பெயர்வோர் தங்கள் நாட்டிற்குள் நுழைவது தங்களுக்குப் பிரச்சினை என்று அரசாங்கங்கள் கூறிவரும் நிலையில், மறுபுறம் புலம்பெயர்ந்தோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ச்சியாக வெளியாகின்றன. அண்மையில் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் அடித்து உதைக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் புலம்பெயர்ந்தோர் வெறும் 1.67 சதுரமீட்டர் அளவே கொண்ட சிறிய இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுக்குழு நடத்திய திடீர் சோதனையின்போதே இந்த உண்மை வெளிப்பட்டது. அங்கு அடைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோருக்குப் போதிய நல்ல தண்ணீரோ, மருத்துவ வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும், அந்தத் தடுப்புக் காவல் மையம் முதலைகள் அதிகம் வாழும் ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவரும் போதெல்லாம், “இது முன்பு நடந்தது, இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டது” என்றோ அல்லது “இதற்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களே காரணம்” என்றோ கூறி அதிகாரிகள் தப்பித்துக் கொள்கின்றனர். சிறந்த வாழ்வைத் தேடியோ அல்லது உயிருக்குப் பயந்தோ வேற்று நாட்டுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகும் நிலையில், இவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் இதுபோன்ற பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு உரிய தீர்வைக் காண்பதாகத் தெரியவில்லை.
