LATEST NEWS
வாழ்க்கை சலித்துவிட்டதா..? “சாக்குப்போக்கு சொல்லும் நமக்கு இவரே பாடம்” ஓய்வு வயதிலும் செக்யூரிட்டி வேலை செய்யும் தாத்தா… இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோரின் இதயங்களை வென்ற வீடியோ..!!
பெரும்பாலான மனிதர்கள் தங்களது வயதான காலத்தில் ஓய்வெடுத்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால், எல்லாரது சூழ்நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஓய்வு பெறும் வயதைத் தாண்டிய ஒரு முதியவர் செக்யூரிட்டி கார்டு சீருடையில் கையில் வருகைப் பதிவேடு மற்றும் கோப்புகளுடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். தள்ளாடும் வயதிலும், வளைந்த முதுகோடும் அவர் எவ்வித சலிப்போ அல்லது சாக்குப்போக்கோ சொல்லாமல் தனது கடமையை முழு அர்ப்பணிப்புடன் செய்து வருவது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இந்த நெகிழ்ச்சியான காட்சியை (Nilpriya) என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@nilpriyavlogs) வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அன்று தனது நாள் மிகவும் மோசமாக அமைந்ததாகவும், ஆனால் இந்த முதியவர் உழைப்பதைப் பார்த்தவுடன் தனது எண்ணம் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “எவ்வித புகாரும் இல்லை, சாக்குப்போக்குகளும் இல்லை; முழு கண்ணியத்துடனும் கடின உழைப்புடனும் அவர் வேலை செய்கிறார். அர்ப்பணிப்பு உணர்விற்கு ஓய்வு பெறும் வயது என்று ஒன்றும் இல்லை என்பதற்கு இவரே சாட்சி” என்று அவர் நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார். சூழ்நிலைகள் ஒருபோதும் வயதைப் பார்ப்பதில்லை என்ற வாழ்க்கைப் பாடத்தை இந்த வீடியோ நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
https://www.instagram.com/reel/DbfoPOpxYmw/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் இதனைப் பல்வேறு கோணங்களில் விவாதித்து வருகின்றனர். சிலர் இந்த வயதான காலத்திலும் தங்களது பெற்றோரை வேலைக்கு அனுப்பும் பிள்ளைகளைக் கண்டித்தும், வேறு சிலர் முதியவரின் குடும்பச் சூழ்நிலை அல்லது பணத் தேவையை உணர்ந்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே வேளையில், இந்த வயதிலும் அவருக்கு வேலை வழங்கி, அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள அந்த செக்யூரிட்டி முகமைக்கு நெட்டிசன்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
