CRIME
“என்னை அடிச்சதுக்கு இதுதான் உனக்குத் தண்டனை..” மாமா செய்த தவறுக்கு 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் அமன் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த இந்தச் சிறுவனின் சடலம், தில்லி-தேராதூன் தேசிய நெடுஞ்சாலை-58 அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. தகவலறிந்ததும் உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், கொலையுண்ட சிறுவனின் உறவினரான 16 வயது சிறுவன் அர்மானைக் கைது செய்துள்ளனர். இவர் உறவுமுறையில் சிறுவனின் அண்ணன் முறை ஆவார். காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கரும்புத் தோட்டத்திலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் மாமா குல்ஷெர் அளித்த புகாரின்படி, ஹரியானாவில் அர்மான் வேலை செய்துவந்த கடையில் திருட்டில் ஈடுபட்டபோது, குல்ஷெர் அவரைப் பிடித்து கடை உரிமையாளரிடம் ஒப்படைத்ததுடன், அவரைத் தாக்கியும் உள்ளார். அந்தத் தாக்குதலுக்கும் அவமானத்திற்கும் பழிவாங்கும் நோக்கில் தான், குல்ஷெரின் அண்ணன் மகனான அமனைக் கடத்தி அவர் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. தற்போது சிறுவன் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
