CINEMA
எஸ்.ஏ. சந்திரசேகர் செய்த அந்த ஒரு காரியம்! விஜய்யின் கேரியரை மாற்றிய ‘பூவே உனக்காக’ – பழைய உண்மைகளை உடைத்த பி.டி. செல்வகுமார்..!”
டிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதற்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் செய்த ஆரம்பகால தியாகங்களும் போராட்டங்களுமே முக்கியக் காரணம். விஜய்யின் ஆரம்பக்கால படங்களில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், பல முன்னணி தயாரிப்பாளர்களிடம் தனது மகனுக்காக வாய்ப்பு கேட்டு எஸ்.ஏ.சி அவர்கள் அலைந்துள்ளார் என்பதை அவரது முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் மற்றும் சக நடிகர்கள் பலமுறை நினைவு கூர்ந்துள்ளனர்.
குறிப்பாக, விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ‘பூவே உனக்காக’ திரைப்படம் முதலில் நடிகர் பிரசாந்திற்குச் செல்ல வேண்டியது என்பது குறித்த அதிர்ச்சி தகவலை பி.டி. செல்வகுமார் பகிர்ந்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியிடம் பிரசாந்திற்காகப் பேசப்பட்ட அந்தப் படத்தின் கதையை, எஸ்.ஏ. சந்திரசேகர் தலையிட்டு தனது மகனுக்கு மாற்றியதாகவும், பிரசாந்திற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த முன்பணச் செக்கை கிழித்துவிட்டு விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகனின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட இந்தச் செயல் பிரசாந்திற்குத் தெரிந்தால் என்ன நினைப்பார் என்று கூட யோசிக்காமல் அன்றைய சூழலில் உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு உயரத்திற்குச் சென்ற விஜய், தற்போது தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாக செல்வகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது மகனின் திருமணத்திற்கு நேரில் வந்து பத்திரிகை வாங்கக் கூட விஜய் வரவில்லை என்றும், பழைய நட்பையும் உழைப்பையும் அவர் மறந்துவிட்டதாகவும் செல்வகுமார் சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம் பேசப்பட்டாலும், இதுபோன்ற பழைய கசப்பான நினைவலைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
