CINEMA
ஹீரோக்களுக்கு செக்..! இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் இப்படித்தான்… தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி அறிவிப்பு..!!
தமிழ் திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். ஒருவேளை அந்தப் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளருக்கு மட்டுமே மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படுகிறது; ஆனால் நடிகர்கள் தங்கள் முழுச் சம்பளத்தையும் பெற்றுக்கொள்வதால் அவர்களுக்குப் பாதிப்பு இருப்பதில்லை. இந்த நிலையை மாற்ற பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகைப் பின்பற்றி, தமிழிலும் புதிய முறையைக் கொண்டுவரத் தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ‘வருவாய் பகிர்வு’ (Revenue Sharing) அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் லாப நஷ்டங்களில் நடிகர்களுக்கும் பங்கு இருக்கும் சூழல் உருவாகும். இந்த முடிவு, பல கோடிகளைச் சம்பளமாகப் பெற்று வந்த முன்னணி ஹீரோக்களுக்கு ஒரு பெரிய ‘ஷாக்’ செய்தியாக அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது. அதன் முதற்கட்டமாக, வரும் மே 2-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
