CINEMA
அம்மா அரசியலில் பிசி…ஆனால் அப்பா செய்த தியாகம்…இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்யாத சாதனை! அமெரிக்க பல்கலைக்கழகத்தை மிரள வைத்த ஆர்.கே. செல்வமணி மகள்…!
தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராகவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் முன்மாதிரி தம்பதியராகவும் திகழ்பவர்கள் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி – நடிகை ரோஜா. இவர்களது மகள் அன்ஷுமாலிகா, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University Bloomington) கணினி அறிவியல் (Computer Science Honors) துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக வழங்கப்படும் அந்த பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான ‘ஹெர்மன் பி வெல்ஸ் டிஸ்டிங்குயிஷ்ட் சீனியர் அவார்டு’ (Herman B Wells Distinguished Senior Award) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி அன்ஷுமாலிகா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் சாதனைக்குப் பிறகு, அன்ஷுமாலிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டம் பெற்ற புகைப்படங்களைப் பகிர்ந்து, தனது தந்தை ஆர்.கே. செல்வமணிக்கு மிகவும் எமோஷனலாக நன்றி தெரிவித்துள்ளார். “அப்பா, என் கனவுகளை பயமில்லாமல் துரத்துவதற்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய பலமே நீங்கள்தான். சில நாட்களில் என் மீதே எனக்கு சந்தேகம் வந்தபோதும், ‘அன்ஷு, உன்னால் இதையெல்லாம் சாதாரணமாக செய்ய முடியும்’ என்று என்னை முழுமையாக நம்பிய ஒரே ஆள் நீங்கள்தான். உங்களது தியாகமும், அன்பும், அந்த வார்த்தைகளுமே என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. உங்க பிள்ளையாகப் பிறந்ததற்கு நான் தினமும் கடமைப்பட்டிருக்கிறேன் அப்பா, லவ் யூ சோ மச்!” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அன்ஷுமாலிகாவின் இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து, வாழ்த்துகளைக் குவித்து வருகிறது. நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் தீவிரமாகப் பிஸியாக இருந்த காலகட்டத்தில், ஒரு பொறுப்பான தகப்பனாக இருந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் ஆர்.கே. செல்வமணி கவனித்துக் கொண்ட விதம் எல்லோரையும் நெகிழச் செய்துள்ளது. ஒரு தாயாகவும் தந்தையாகவும் இருந்து மகளை உலகமே பாராட்டும் அளவிற்கு வளர்த்தெடுத்த ஆர்.கே. செல்வமணியின் அர்ப்பணிப்பிற்கும், தந்தையின் தியாகத்தை உணர்ந்து சாதித்துக் காட்டிய மகள் அன்ஷுமாலிகாவிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
