LATEST NEWS
அரசு ஊழியர்களின் கவனத்திற்கு…! மதிய உணவுக்கு வீட்டிற்கு செல்ல கூடாது… அடுத்தடுத்து கண்டிஷன் போட்ட அரசு…!!
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதனின் அறிவுறுத்தலின்படி, அரசுச் சார்புச் செயலாளர் முருகேசன் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் முக்கியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு அழைப்பை ஏற்று, புதுவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. குறிப்பாக, அவசியமில்லாத வெளிநாட்டுப் பயணங்கள், கல்வி மற்றும் ஆலோசனைக் குழுச் சுற்றுப்பயணங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு முற்றிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு வாகனங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த அதிகாரிகள் ஒரே வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளும் நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணச் செலவுகளையும் எரிபொருள் தேவையையும் குறைப்பதற்காக, அரசுத் துறைகளுக்கு இடையேயான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை இனி நேரில் நடத்தாமல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ எனப்படும் காணொலி வாயிலாக மட்டுமே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் தினசரி அலுவலகப் பயணங்களுக்கு அதிகளவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இதுதவிர, அலுவலகங்களில் மதிய உணவு நேரத்தில் ஊழியர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்று வருவதைத் தவிர்த்து, மதிய உணவை அலுவலகத்திற்கே கொண்டு வந்து சாப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், மின்சாரத்தை மிச்சப்படுத்தப் பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் கணினிகள், விளக்குகள் மற்றும் ஏசி (AC) போன்ற மின்சாதனங்களை உடனடியாக அணைத்து வைக்க வேண்டும் என்றும், இந்த விதிகளை அனைத்துத் துறைத் தலைவர்களும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
