CINEMA
30 ஆண்டுகால சினிமா பயணம்…வறுமையின் விளிம்பில் ‘மின்னல்’ பாவா லட்சுமணன்…. இன்று இருப்பதற்கு வீடின்றி கதறியழும் பிரபலம்…சி.எம் விஜய்க்கு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்த பாவா லட்சுமணன்…!
“மாயி அண்ணா வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. வா மாமா மின்னல்!” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். ‘மாயி’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்த காமெடி லூட்டிகள், இன்று வரை இணையத்தில் மீம்ஸ் மெட்டீரியலாக 90ஸ் கிட்ஸ்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளன. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதலில் தயாரிப்பு மேலாளராகவும், பின்னர் நடிகராகவும் வலம் வந்த இவரின் தற்போதைய பரிதாப நிலை, ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பாவா லட்சுமணன் அளித்த பேட்டியில், தமக்கு நேர்ந்த விபத்து மற்றும் வறுமை குறித்துக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். சில காலங்களாகச் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாத சூழலில், கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஜெனரேட்டர் மீது கால் வைத்துள்ளார். அப்போது வலி தெரியாத நிலையில், 10 நாட்கள் கழித்துக் கால் பயங்கரமாக வீங்கியுள்ளது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது, இன்பெக்ஷன் (தொற்று) தீவிரமடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காலின் 3 விரல்களையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்திற்குப் பிறகு, பாவா லட்சுமணனால் இனி நடக்கவே முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பரவிய தவறான வதந்திகளால் அவருக்கு இருந்த சொற்ப வாய்ப்புகளும் பறிபோயின. தற்போதைய சூழல் குறித்து உருகிய அவர், “இப்போது நான் பிச்சை எடுக்கும் நிலைமையில் தான் இருக்கிறேன்; தங்கியிருக்கும் வீட்டையும் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள்” எனத் தனது நிலையை விளக்கியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் விஜய் டிவி பாலா, நடிகர் ஜீவா போன்றவர்கள் சாப்பாட்டிற்கும் மருத்துவத்திற்கும் உதவுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக முதலமைச்சர் விஜய் தமக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும், இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்தால் கடைசி காலத்தை நிம்மதியாகக் கழிப்பேன் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
